தமிழகம்

மீண்டும் வேலைகேட்டு நோக்கியா தொழிலாளர்கள் உண்ணாவிரதம்: கடன் உதவி வழங்க தொழிற்சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்த நிரந்தர தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்ப ஓய்வு வேண்டாம்; வேலைதான் வேண்டும் எனக்கோரி ஸ்ரீபெரும்புதூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 2006-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு கைமாறியதையடுத்து, கடந்த 1-ம் தேதி மூடப்பட்டது. இதில் கடைசியாக 150 பெண்கள் உட்பட 851 பேர் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், இதில் பணிபுரிந்து வந்த நிரந்தர தொழிலாளர்கள் பலர் நிறுவனம் அறிவித்த விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்கவில்லை. இதனால் மீண்டும் வேலை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, தொழிற்சாலை முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நேற்று நடந்தது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ‘நோக்கியா தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிரந்தர தொழிலாளர்களுக்கு விருப்பு ஓய்வு அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் குறித்து நிர்வாகம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. இதில், வேலையிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு சிலரிடம் மட்டும் கருத்து கேட்டுவிட்டு விருப்பு ஒய்வு ஒப்பந்தத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

நிர்வாகத்துக்கு ஆதரவாக தொழிற்சங்க நிர்வாகிகள் செயல்பட்டதால் பலருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. மேலும் இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்காத தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர். இப் போராட்டத்தில் ஏராளமான நிரந்தர தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே, வேலையிழந்த 851 தொழிலாளர்களுக்கும் கடனுதவி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

தொழிலாளர்கள் தங்களது நஷ்டஈட்டு தொகையை நவம்பர் 3 முதல் 10-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக, தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டை, பாதுகாப்பு பெட்டக சாவி ஆகியவற்றுடன் ராஜினாமா கடிதத்தையும் சமர்ப்பித்து வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 250 பேர் கடிதம் கொடுத்தனர்.

நோக்கியா இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபு கூறும்போது, ‘‘கடந்த ஏப்ரலில் விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அதிகபட்சம் 20 லட்சம் வரை கடன் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று வேலையிழந்த 851 தொழிலாளர்களுக்கும் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு வருகிறோம்’’ என்றார்

SCROLL FOR NEXT