கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து கேரளத்தை ஒட்டியுள்ள மாநில எல்லைப் பகுதிகளில் கால் நடை பராமரிப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவ தோடு, வாகனங்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக் கின்றனர்.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி, புறக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் வாத்துகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பறவைக்காய்ச்சல் தொற்று, கறிக்கோழிகளுக்கும் பரவக்கூடியது என்பதால் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் கறிக்கோழிகளுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது. மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் மருத்துவர் குழுக்கள் நியமிக்கப்பட்டு நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
800 குழுக்கள்
கேரளத்திலிருந்து தமிழகத் துக்கும் இந்த நோய் பரவும் நிலை உள்ளதால், தமிழக எல்லை களிலும் சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை மாவட்டப் பகுதிகளான வாளையாறு, வேலந்தாவளம், நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், ஆனைகட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இதேபோல் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே கால்நடைத்துறை சார்பில் சிறப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து வாகனங்கள் மீதும் தெளிப்பான் மூலம் கிருமிநாசினி தெளிக்க கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கேரளப் பகுதியிலிருந்து மாநில எல்லைகள் வழியாக சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்படும் கோழியினங்கள், முட்டைகள், வாத்துகள், கால்நடைகளுக்கான தீவனங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
தமிழகப் பகுதியில் இந்த நோயின் தாக்கம் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதால் தமிழகத்திலிருந்து செல்லும் சரக்குகள் வழக்கம்போல அனுமதிக்கப்படுகின்றன.
இது குறித்து கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முத்து கோபாலகிருஷ்ணன் கூறுகை யில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு மாநில எல்லை யிலேயே மருந்துகள் தெளித்து அனுமதிக்கப்படுகின்றன.இந்த பணியில் 21 குழுக்கள், நோய்ப் பரவல் தடுப்பு மருந்துகளுடன் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. பிச்சனூர், நடுப்புணி பகுதிகளில் கேரளாவி லிருந்து கறிக்கோழிகளை ஏற்றி வந்த சில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்றார்.