காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் பூஜை தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் குளத்தில் இருந்து ஆதி அத்தி வரதர் சிலை, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் சிறப்பு பூஜை செய்யப்படுகின்றது. பின்னர் மீண்டும் அத்தி வரதரை குளத்திலேயே வைத்து விடுகின்றனர்.
கடந்த 1979-க்குப் பின் தற்போது ஸ்ரீ அத்தி வரதரை வெளியே எடுத்து சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆயிரம் ஆண்டுகளாக வரதராஜர் கோயிலை நிர்வகித்தும், பல்வேறு படையெடுப்புகளில் இருந்து பாதுகாத்தும் வந்த தாதாச்சாரியார் குடும்பத்தினரே கோயில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்துள்ளதாகக் கூறி, தங்கள் குடும்பத்தினரைப் பங்கேற்க அனுமதிக்கக் கோரி தத்தாசாரியார் குடும்பத்தைச் சேர்ந்த சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து தங்கள் குடும்பத்தினரை அத்தி வரதருக்கு பூஜைகள் செய்ய இந்து அறநிலையத்துறை அனுமதி மறுத்து வருவதாகவும், தங்கள் குடும்பத்தினரையும் விலகி வைத்துள்ளதாகவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, அத்தி வரதருக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும். அத்தி வரதர் நிகழ்ச்சிகான அறக்கட்டளையில் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என தாதாச்சாரியார் குடும்பத்தினர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, அத்தி வரதர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பூஜைகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வரும் 5-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளி வைத்தனர்.