தமிழகம்

ஓடும் ரெயிலில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி மனைவியிடம் செயின் பறிப்பு

செய்திப்பிரிவு

ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. மனைவியிடம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில் கிளம்பும் நேரத்தில் ஒரு நபர் செயினை பறித்து ஓட்டம் பிடித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்து சாலையில் தனியே செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, செல்போன் பறிப்பது பாதுகாப்பில்லாமல் இருப்பதால் ஓடும் ரெயிலை குறிவைத்து ரெயில் புறப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன் செயின்பறிக்கும் புதிய முறையை ஒருவர் நடத்தியுள்ளார்.

சென்னை காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி ஏடிஎஸ்பியாக ஓய்வு பெற்றவர் நந்தகுமார். இவர் தனது மனைவியுடன் கோவை செல்ல முடிவு செய்திருந்தார்.

இதற்காக காலை 6.10 மணிக்கு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  கோவைச் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய தனது மனைவி சரளாவுடன் ரெயில் நிலையம் வந்தார்.

 தங்களது பெட்டி, சீட்டு எண் ஆகியவற்றை சரிப்பார்த்து அமர்ந்தனர். ரயில் புறப்பட்ட சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் நந்தகுமாரின் மனைவி ஜன்னலோரம் அமர்ந்து சாய்ந்த நிலையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். ரெயில் சரியான நேரத்துக்கு புறப்பட்டது.

அப்போது ஜன்னல் ஓரமாக அமர்ந்து இருந்த சரளாவின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை ஒரு நபர் திடீரென பறித்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கி ஓடினார். செயினைப் பறிக்கும்போது விடாமல் பிடித்துக்கொண்டதால் செயின் அறுந்து, செயினைப்பறித்த நபர் கையில் 2 சவரன் தங்க சங்கிலியும், சரளாவிடம் மீதிச்சங்கிலியும் சிக்கியது.

திடீரென நிகழ்ந்த செயின்பறிப்பாலும், பறித்த நபர் இறங்கி ஓடிவிட்டதாலும், ரெயிலும் வேகமெடுத்துவிட்டதாலும் ஓய்வு காவல் அதிகாரி நந்தகுமார் செய்வதறியாது திகைத்தார். இதுகுறித்து உடனடியாக ரெயில்வே போலீஸாருக்கு புகார் அளிக்க போலீஸார் ரெயில் நிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் நீல நிறச்சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நபர் ஒருவர் செயினைப் பறித்தப்பின் தண்டவாளத்தைக் கடந்து சரக்குகள் ஏற்றி இறக்கும் பகுதி வழியாக வால்டாக்ஸ் சாலை நோக்கி செல்வதும், போனில் பேசிக்கொண்டே செல்வதும் பதிவாகியிருந்தது.

அதை வைத்து செயின்பறித்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ரெயிலில் பயணம் செய்பவர்கள் அதிக நகை அணிந்து வருவதும், பிறர் பார்க்கும் வண்ணம் அஜாக்கிரதையாக இருப்பதையும் தவிர்க்கவேண்டும், ஜன்னலோர இருக்கையில் அமர்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT