தமிழகம்

10% இடஒதுக்கீடு: திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்

செய்திப்பிரிவு

10% இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க  திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட உள்ளதாக  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலந்தாய்வு வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பொருளாதாரத்தில் நலித்த வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடுக்காக விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு நேரம் முடிவுசெய்யப்படும். இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும்'' என்று தெரிவித்தார் விஜயபாஸ்கர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்க்கட்சிகளைக் கூட்டி இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து திங்கட்கிழமை அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT