தமிழகம்

நள்ளிரவில் பர்தா அணிந்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்த இளைஞர்: ரோந்து போலீஸார் மடக்கிப்பிடித்தனர்

செய்திப்பிரிவு

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் பெண் வேடமிட்டு பர்தா அணிந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த இளைஞர் ரோந்து போலீஸாரிடம் சிக்கினார்.

நேற்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் வேளச்சேரி 100 அடி சாலையில் வேளச்சேரி போலீஸார் ரோந்துச் சென்றனர். அப்போது அங்குள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்- வாசலில் பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆண்கள் அணியும் ஹெல்மெட் அணிந்தபடி கையில் ஒரு பையுடன் நிற்பதைப்பார்த்தனர்.

எதற்காக அந்தப்பெண் நள்ளிரவில் ஏடிஎம் வாசலில் நிற்கிறார், வாகனம் எதுவும் ரிப்பேரா? என யோசித்த போலீஸார், நள்ளிரவில் தன்னந்தனியாக நிற்கும் பெண்ணுக்கு உதவுவதற்காக அருகில் சென்றனர்.

போலீஸார் அருகில் வருவதைப் பார்த்ததும் அந்தப்பெண் கையில் உள்ள பையை வீசி எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். ஏம்மா பொண்ணு நில்லு நாங்கள் போலீஸ் உனக்கு உதவுவதற்காகத்தான் வந்துள்ளோம் என போலீஸார் சொன்னதை மீறி ஓடியதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீஸார், ஓடும் ஸ்டைலைப் பார்த்தால் ஒரு பெண் ஓடுவதுபோல் இல்லையே என துரத்தியுள்ளனர்.

துரத்திச் சென்ற போலீஸார் பர்தா அணிந்திருந்த பெண்ணை பிடித்து முகத்தில் மூடியிருந்த துணியை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். பர்தா உடையில் இருந்தது பெண் அல்ல இளைஞர் என்பது தெரியவந்தது.

சென்னையில் வசிப்பவர் அந்த நபர், அவர் போலீசாரை பார்த்ததும் கையில் வைத்திருந்த வெல்டிங் மெஷின் மற்றும் ஏடிஎம் மெஷினை அறுத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட கட்டிங் மெஷின் உள்ளிட்டவைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். அதை பார்த்த போலீசார் அவரை துறத்தி பிடித்தனர்.

உடனடியாக அவரை வேளச்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் பெயர் ராஜ்குமார்,(24) என்பதும் வேளச்சேரி காந்தி சாலையில் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.

அவர் வைத்திருந்த வெல்டிங் கடையை டெவலப் செய்வதற்காகவும், வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் ஏடிஎம்-ல் கொள்ளையடிக்க வந்ததாகவும், கொள்ளையடிக்க அவரது வெல்டிங் கடையில் இருந்து ஏடிஏம் மெஷினை அறுத்து எடுக்க வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் உள்ளிட்டவைகளை எடுத்து வந்ததும், தெரியவந்தது.

முதல் முறையாக கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதால் யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க பர்தா அணிந்து வந்ததாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். உன் பர்தாதான் உன்னை காட்டி கொடுத்தது என்று அவரை போலீஸார் கைது செய்தனர்.

ஏடிஎம் மையத்திற்கு இரவு காவலாளி இல்லாததால் அதை நோட்டமிட்டு ராஜ்குமார்  கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.  சரியான நேரத்தில் ரோந்து போலீஸார் வந்ததால் ஏடிஎம் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டது.

SCROLL FOR NEXT