ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பயின்ற அரசுப் பள்ளிக்கு தமிழ் எண் சுவர் கடிகாரம் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய 1-ம் எண் தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும் படித்தார். இந்தப் பள்ளி தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு ஈரோட்டைச் சேர்ந்த தமிழ் மொழி ஆர்வலர் மாரியப்பன் தமிழ் எண் சுவர் கடிகாரத்தை இன்று (வியாழக்கிழமை) வழங்கினார். பள்ளி தலைமையாசிரியை ராஜலட்சுமி மற்றும் மாணவர்கள் கடிகாரத்தைப் பெற்றுக்கொண்டனர்.
மாரியப்பன் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் எண்கள் மீதான ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில், தனது சொந்த செலவில், தமிழ் எண் சுவர் கடிகாரங்களை தயார் செய்து ஏற்கெனவே பல பள்ளி, கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.