அமமுக வீழ்ச்சி அடைந்துவிட்டதாக பிம்பம் உருவாக்கப்படுகிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அமமுக பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஆர்.கே.நகர் தொகுதியை ஆளுங்கட்சியினர் முழுமையாகப் புறக்கணித்திருக்கிறார்கள். அங்கே ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்தபோது அவர் சில திட்டங்களை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டங்கள், பாலங்கள் ஆகியவை ஒப்பந்தம் விடப்பட்ட பிறகும் கிடப்பில் உள்ளன. குடிநீர் பிரச்சினை மோசமாக இருந்தபோது, லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க முயற்சித்தோம். அதனால் இப்போது அரசு ஓரளவுக்குத் தண்ணீர் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கழிவுநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட சரியாகப் பராமரிக்கப்படவில்லை. கடந்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதியே, அதிருப்தி எம்எல்ஏக்களாக இருந்த ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோரிடம் எங்கள் கட்சியில் இருந்தால் பதவி போய்விடும். தனித்துச் செயல்படுங்கள் என்றே கூறினேன்.
நேற்று அவர்கள் இருவரும் பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். போன வாரம் வரை அவர்கள் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். என்னைவிட பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் சென்றிருக்கிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை.
தேர்தல் தோல்விக்குப் பிறகு சில நிர்வாகிகள், வேறு கட்சிகளுக்குச் சென்றுள்ளனர். அப்படிச் செல்லும்போது எங்களுக்கு எதிராகப் பேசிவிட்டுச் செல்கின்றனர். பொதுமக்களின் முன்னிலையில் அமமுக வீழ்ச்சி அடைந்துவிட்டதாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது.
நிர்வாகிகள் செல்வதாலேயே, ஓர் இயக்கம் வீழ்ச்சி அடைந்துவிடாது. இதை வருங்காலமும் தொண்டர்களும் நிரூபிப்பர். எத்தனை பேர் சென்றாலும் இயக்கத்துக்கு ஒன்றும் நடக்காது''.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.