பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் எஸ்.ஐ. கத்திப்பாரா மேம்பாலத்தில் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
தாம்பரம் சானிடோரியம் துர்கா நகரில் வசித்தவர் நடராஜ்(56). இவர் பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சென்னைக்கு குடியரசு தலைவர் வருவதை ஒட்டி சிறப்பு கூட்டம் இன்று காலையில் நந்தம்பாக்கத்தில் நடந்தது. அதில் பங்கேற்றுவிட்டு காலை 11-30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சானிடோரியத்தில் உள்ள வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார் நடராஜ்.
மோட்டார் சைக்கிளில் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி சென்றபோது பூந்தமல்லி நோக்கி சென்றார். பாலத்தின்மீது நேராக செல்லவேண்டிய அவரின் பின்புறம் சிமெண்ட் கலவை ஏற்றிய லாரி வந்துள்ளது.
நேராக செல்லவேண்டிய எஸ்.ஐ.நடராஜ் இடதுபுறம் ஓரமாக சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லிக்கு இடதுபுறம் திரும்பும் வழி வந்துள்ளது. பின்னால் வந்த லாரி இடதுபுறம் திரும்பியது. அப்போது நேராக சென்ற நடராஜ் மோட்டார் சைக்கிள்மீது சிமெண்ட் கலவை லாரி மோதியது. இதில் அவர் தலையிலிருந்த ஹெல்மட் நசுங்கி உடைந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று நடராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்(37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.