மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவுக்கு மாற்று வேட்பாளராக திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ இன்று (திங்கட்கிழமை) காலை மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத்ரேயன்(அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது.
அதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரை தேர்வு செய்யும் தேர்தல் நடக்க உள்ளது.
தற்போதுள்ள நிலையில் திமுகவுக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் 3 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்யும் தகுதி உள்ளது. ஏற்கெனவே திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்குவதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வைகோவுக்கு அந்த இடம் வழங்கப்பட்டது.
வைகோ மீதான தேச துரோக வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் அவருக்குக் கிடைத்த ஓராண்டு சிறை தண்டனை, எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டதால் சனிக்கிழமை அன்று மனு தாக்கல் செய்தார் வைகோ.
எனினும் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால், வேட்பு மனு பரிசீலனையில் நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் வைகோவுக்கு மாற்று வேட்பாளரை நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டது.
இதன் அடிப்படையில் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ மனு தாக்கல் செய்துள்ளார். கொடநாடு கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கிலும் சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டவர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆவார்.
இந்நிலையில் வேட்பு மனுவை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் அளித்தார் இளங்கோ.
முன்னதாக, மதிமுக தலைவர் வைகோ, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகிய மூன்று வேட்பாளர்களும் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கலின்போது ஸ்டாலின், திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கெனவே மனு தாக்கல் செய்த வில்சன் மற்றுல் ஏராளமான வழக்கறிஞர்கள் உடன் வந்தனர்.