அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னிஷியன்கல் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தமிழகம் முழுவதும் வெறும் ஆறு பேர் மட்டுமே நிரந்தர டயாலிசிஸ் டெக்னீசியன்கள் பணியில் உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்,தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச்சங்கம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
1. 2005 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3500-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் டெக்னீசியன்கள், அரசு கல்லூரிகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு தவறிவிட்டது.இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
2. அரசு மருத்துவமனைகளில் தமிழகம் முழுவதும் வெறும் ஆறு பேர் மட்டுமே நிரந்தர டயாலிஸிஸ் டெக்னீசியன்களாக பணியில் உள்ளனர்.
3. தமிழகத்தில் பல அரசுமருத்துவமனைகளில் டயாலிஸிஸ் டெக்னீசியன்கள் இல்லாமலேயே, டயாலிஸிஸ் சிகிச்சைப் பிரிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது நோயாளிகளின் நலன்களுக்கு எதிரானது. நோயாளிகளின் உயிர்களோடு அரசு விளையாடுவது கண்டனத்திற்குரியது.
இது எம்.சி.ஐ விதிமுறைகளுக்கு எதிரானது. அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதியின் படி மூன்று டயாலிஸிஸ் இயந்திரத்திற்கு ஒரு டெக்னீசியன் நியமனம் செய்யப்பட வேண்டும். அந்த விதி முறை கடைபிடிக்கப்பட வில்லை. எம்.சி.ஐ விதி முறைப்படி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் டயாலிஸிஸ் டெக்னீசியன்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
4. அரசு மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் டெக்னீசியன்களை பணி அமர்த்தாமல், இதர பணியாளர்களுக்கு 15 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை டயாலிஸிஸ் சிகிச்சைக்கு பயிற்சி அளித்து , அவர்களை டயாலிஸிஸ் செய்யும் பணியில் ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் .
5.HIV, மஞ்சட்காமாலை -B,மஞ்சட்காமாலை C வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளுக்கு தனியாக டயாலிஸிஸ் மையங்களை அரசு மருத்துவமனைகளில் துவங்கிட வேண்டும்.இதன் மூலம் இதர நோயாளிகளுக்கு மேற்கண்ட நோய் தொற்றுகள் ஏற்படமால் தடுக்க முடியும்.
6.அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் படிப்பு படித்த டயாலிஸிஸ் டெக்னீசியன்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும்.அவர்களை பாதிக்கக்கூடிய பழைய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
7. அரசுமருத்துவமனைகளுக்கு, பணியமர்த்தும் டெக்னீசியன்களை, மதிப்பெண் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யாமல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் அல்லது போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்திட வேண்டும்.
8. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் டயாலிஸிஸ் டெக்னீசியன்கள் இல்லாமலேயே டயாலிஸிஸ் மையங்கள் செயல்படுகின்றன. இத்தகைய மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. சான்றிதழ் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த டெக்னீசியன்கள் மூன்று இயந்திரங்களுக்கு ஒரு டயாலிஸிஸ் டெக்னீசியன் என்ற விகிதத்தில் பணி புரிகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
10. தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள்,
வட்டார மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டயாலிஸிஸ் கருவிகளை நிர்மாணிக்க வேண்டும்.
11.அனைத்து மருத்துவமனைகளிலும் டயாலிஸிஸ் மையங்கள், பொதுமக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் செயல்படச் செய்திட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 4 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.