ரயில்வே சீசன் டிக்கெட் புதிதாக எடுப்ப வர்கள் மட்டும் உறுதிமொழிப் படிவம் கொடுத்தால் போதும். புதுப்பிப்பவர்கள் உறுதிமொழிப் படிவம் கொடுக்கத் தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் சீசன் டிக்கெட் எடுத்துப் பயணிப்பவர்கள் உறுதிமொழிப் படிவம் தாக்கல் செய்யவேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது. படிவத்துடன் அடையாளச் சான்று நகல், புகைப்படம் இணைக்குமாறும் சில நிலையங்களில் கூறப்பட்டது. இதனால், கவுன்ட்டர்களில் ஒவ்வொரு பயணியும் சீசன் டிக்கெட் புதுப்பிக்க 10 முதல் 15 நிமிடம் வரை ஆனது.
அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்லும் அவசரத்தில் கவுன்ட்டர்களில் வெகு நேரம் காத்திருந்ததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும், ஒவ்வொரு முறை புதுப்பிக்கும் போதும் உறுதிமொழிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
‘ரயில்வே சீசன் டிக்கெட்டை ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதி வருமா? ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு’ என்ற தலைப்பிலான செய்தி, ‘தி இந்து’ நாளிதழில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி வெளியானது. அதில், ‘சீசன் பாஸ் புதுப்பிக்க ஒவ்வொரு முறையும் உறுதிமொழிப் படிவம் வழங்குமாறு ரயில்வே வலியுறுத்துகிறது. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். இந்த நடைமுறையை ரயில்வே மாற்றவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு ஆதரவு தெரிவித்து ‘தி இந்து’ இணையதளத்தில் ஏராளமான வாசகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ‘மும்பை புறநகரில் உள்ளதுபோல, ஆன்லைனில் சீசன் டிக்கெட் பதிவு செய்யும் வசதியை அனைத்து பகுதிகளிலும் விரிவுபடுத்தலாம். பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும்’ என்றும் வாசகர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், சீசன் டிக்கெட் புதுப்பிக்கும்போது இனி உறுதிமொழி படிவம் வழங்கத் தேவையில்லை. ஆனால் புதிதாக சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கு உறுதிமொழி படிவம் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘இதுதொடர்பாக நானும் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தேன். தெற்கு ரயில்வேயின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது’’ என்றார்.