10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். எதிர்க்கட்சிகளைக் கூட்டி இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கிடையே 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து இன்று மாலை (திங்கட்கிழமை) 5.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மக்கள் நீதிமய்யத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தொடங்கிய 14 மாதத்திலேயே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3.78% வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.