பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் வனிதா விஜயகுமார் மீது குழந்தை கடத்தல் புகாரில் போலீஸார் விசாரணை நடத்த, தற்போது இன்னொரு போட்டியாளர் மீரா மிதுனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் வனிதா விஜயகுமார் ஒருவர். முதல் நாள் அவர் மேடையில் தனது 2 பெண் குழந்தைகளுடன் தோன்றினார். இரண்டாவது பெண் குழந்தை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் விவாகரத்து செய்த 2-வது கணவர் ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறது.
ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் அவர் குழந்தையை தெலங்கானாவிலிருந்து அழைத்து வந்துவிட்டார். குழந்தையைக் கடத்தியதாக தந்தை ஆனந்தராஜ் அளித்த புகாரின்பேரில் தெலங்கானா போலீஸார் வாரண்ட்டுடன் சென்னை வந்துள்ளனர்.
சென்னை போலீஸாருடன் பிக் பாஸ் வீட்டுக்கு தெலங்கானா போலீஸார் சென்றனர். இந்த விவகாரம் ஒருபுறம் இருக்கையில் தென்னிந்திய அழகியாகத் தேர்வான மீரா மிதுன் என்கிற தமிழ்ச்செல்வி என்பவர் சமீபகாலமாக மீடியாவில் பரபரப்பாக உலா வந்தார்.
மீரா மிதுன் சமீபத்தில் காவல் துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ''தென்னிந்திய அழகியான தான் தனியாக அழகிப் போட்டி நடத்த, தொழில் போட்டி காரணமாக 2 நபர்கள் தன்னை மிரட்டி வருகிறார்கள். அழகிப் போட்டிகளில் தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. நான் நடத்தும் இந்த அழகிப் போட்டி தமிழ்ப் பெண்களுக்காகத் தான்.
ஆனால், அதைத் தடுக்கும் முயற்சியில் 2 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நான் நடத்த உதவியாக இருக்கக்கூடிய விளம்பரதாரர்களையும் அவர்கள் மிரட்டுகிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 3-ம் தேதி வடபழனி நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ள அழகிப் போட்டிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என்று புகார் அளித்திருந்தார்.
இதற்கிடையில், அழகிப்போட்டி நடத்துவதற்காக பலரிடம் மீரா பணம் வாங்கி தங்கள் பெயரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, மிஸ் சவுத் இந்தியா அமைப்பு, மீராவுக்கு வழங்கிய பட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இவ்வாறு சர்ச்சையில் சிக்கிய மீரா பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக அவரது தாயார் சமீபத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்த 2 நாட்கள் கழித்து உள்ளே நுழைந்தார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சாக்ஷி அகர்வால், அபிராமி உள்ளிட்டோர் மீரா மிதுனை விமர்சிக்க அங்கும் பிரச்சினை ஆரம்பமானது. ஒரு கட்டத்தில் வனிதா விஜயகுமாரும் அவருடன் மோதினார்.
பரபரப்புக்குப் பஞ்சமில்லாத மீரா மிதுன், தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் மீரா மிதுனுக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. அதில் தன்னிடம் வாங்கிய 50 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் மீரா மிதுன் ஏமாற்றியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரஞ்சிதா புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த பிக் பாஸ் சீசன் 3 அரங்கில் உள்ள மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீஸார் வரும் ஜூலை 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் தான் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ளதால் தான் வெளியேறும்வரை வர இயலாது. ஆகவே வெளியே வந்த பின் காவல் நிலையம் வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை தேனாம்பேட்டை போலீஸார் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது நேரில் சென்று விசாரிப்பார்களா? என்பது தெரியவில்லை. பிக் பாஸ் சீசன் 3 உள்ளே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மோதல், ஆக்ரோஷம் என இருக்க வெளியேவும் அதே அளவு பரபரப்பு போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையால் உருவாகியுள்ளது.