இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று உதயநிதி ஸ்டாலின் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வடசென்னை தொகுதி எம்.பி.யும் திமுக மருத்துவர் அணி நிர்வாகியுமான கலாநிதி வீராசாமியின் இல்லத் திருமண விழா, சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டார். அப்போது உதயநிதிக்கு கலாநிதி வீராசாமி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, ''அனைவருக்கும் வணக்கம், மணமக்களுக்கு எனது முதற்கண் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாளவிகா மற்றும் விஷ்ணு பிரசாத் உங்கள் இருவருக்கும் இந்த நாள் எப்படி மறக்க முடியாத நாளாக இருக்குமோ, அதேபோல எனக்கும் இந்தநாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்'' என்றார் உதயநிதி.
அப்போது கைத்தட்டல்கள் உரக்க ஒலித்தன. மேலும் பேசிய அவர், ''இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், என்னைக் கலாநிதியின் குடும்பத்தில் ஒருவராக ஏற்று, அவர்களுடைய இல்லத் திருமணத்தில் நன்றியுரையை ஆற்றக்கூடிய வாய்ப்பை அளித்திருக்கிறார். இதற்கு சகோதரர் கலாநிதி வீராசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமண விழாவுக்கு வருகை தந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கழகத் தோழர்கள், முன்னோடிகளுக்கும் மணமக்களின் சொந்தங்களுக்கும், திருமணத்துக்கு வருகை தந்தை அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணிச் செயலாளராக நடிகரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்று (வியாழக்கிழமை) மாலை பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்று உதயநிதி ஸ்டாலின் சூசகமாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.