சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மறு விசாரணை தொடங்கியது. இதற்காக யுவராஜ் உட்பட 15 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் ஜோதிமணி இறந்துவிட்டார். இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய அமுதரசு தலைமறைவாக உள்ளார். செல்வராஜ் ஜாமீனில் உள்ளார். யுவராஜ் உட்பட 14 பேரும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் முதன் முறையாக விசாரணைக்கு வந்தபாது யுவராஜ் உட்பட 14 பேரை போலீஸார் ஆஜர்படுத்தினர். செல்வராஜ் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கில் யுவராஜ், அருண் தவிர்த்து மற்ற 12 பேரி்ன் ஜாமீன் மனுக்கள் கடந்த வாரம் தள்ளுபடியானது.
இந்த வழக்கு நீதிபதி தனசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையிலுள்ள யுவராஜ் உட்பட 14 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள செல்வராஜ் ஆஜரானார்.
கொலை வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் மறு விசாரணை தொடங்கியது. பின்னர் விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.