தமிழகம்

பயணி தவறவிட்ட 15 சவரன் நகை ‘பை’; நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: காவல் ஆணையர் வெகுமதி அளித்து பாராட்டு

செய்திப்பிரிவு

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, மாதவரம், பொன்னியம்மன்மேடு, சந்திரபிரபு காலனியில் வசிப்பவர், வினோத்(35), இவரது மனைவி  நர்மதா (31), திருச்சிக்கு சென்றிருந்த இவர் நேற்று காலை, திருச்சியிலிருந்து பேருந்து மூலம் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்.  பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு ஆட்டோவில் ஏறி, திரும்பியுள்ளார்.

ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவரது கைப்பையை அவர் வந்த ஆட்டோவில் தவறுதலாக மறந்து வைத்துவிட்டது தெரியவந்தது.  அந்த கைப்பையில் நர்மதா தன்னுடைய 15 சவரன் தங்க நகை, செல்போன், பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் பணம் ரூ.500/- வைத்திருந்தார்.

அதிர்ச்சியடைந்த  நர்மதா வெளியில் வந்து ஆட்டோவை தேடினார், ஆனால் ஆட்டோவை காணவில்லை, தனது கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டது தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் நர்மதா புகார் கொடுத்தார்.

இந்நிலையில், நர்மதா கைப்பையை தவறவிட்ட ஆட்டோவின் ஓட்டுநர் முருகேசன், என்பவர் அதன்பின்னர் பல சவாரிகள் முடித்துவிட்டு ஆட்டோவை துடைக்கும்போது பார்த்தபோது, ஆட்டோ பயணிகள் இருக்கையின் பின்னால் ஒரு கைப்பை சிக்கி இருந்ததை பார்த்துள்ளார்.

உடனே முருகேசன், பையை திறந்துப்பார்க்க அதில் 15 சவரன் தங்க நகைகள் இருப்பதைப்பார்த்து அதிர்ந்து போயுள்ளார். மேற்படி கைப்பையிலிருந்த பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பார்த்தபோது அது காலையில் கோயம்பேட்டிலிருந்து மாதவரம் வந்து இறங்கிய பெண் பயணியுடையது என்பதை தெரிந்துக்கொண்ட அவர்,  மேற்படி கைப்பையை மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸார் நர்மதாவை வரவழைத்து கைப்பையை ஒப்படைத்தனர், பின்னர் நர்மதா கைப்பையை சோதனை செய்து, 15 சவரன் தங்கநகை, பணம், செல்போன் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதை உறுதி செய்து ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தார்.

15 சவரன் தங்கநகை மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் குறித்து தகவல் அறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்,  இன்று ஆட்டோ ஓட்டுநர் முருகேசனை தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

SCROLL FOR NEXT