மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம். எஸ்.தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு சிபி ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பேட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 8, 10, 12, 16 வயது என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 70 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மதுரை மேலூர் அ.வல்லாளப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவன் எம்.சந்தோஷ், 5 புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதற்காக அவருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் பரிசுாக வழங்கப்பட்டது.
மாணவர் சந்தோஷை பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஆசிர்வாதம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, சதுரங்க பயிற்சியாளரும், இடைநிலை ஆசிரியருமான ஞா.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதே பள்ளியின் மாணவர்கள் பிரபாகரன், தேவநாத் ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றனர்.