மொழி தோன்றுவதற்கு முன் சைகை, ஓவியங்கள் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் மக்கள். இவ்வாறு வரையப்பட்ட தொன்மையான ஓவியங்கள், உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கலை மரபை, ஓவியங்கள் மற்றும் கற்செதுக்குகள் என இரு வகைகளாக பிரிக்கலாம். இந்தியாவில் பரவலாக அனைத்து மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேச மலைக் குன்றுகளில் அதிக எண்ணிக்கையில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல, தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகளில் உள்ள மலைகளில் உள்ளன. ஓவியங்கள் வரையப்பட்டுள்ள முறை, பயன்படுத்தப்பட்ட வண்ணங்களைக் கொண்டு புதிய கற்காலம், பெருங்கற்காலம் என அவற்றின் காலத்தை கணக்கிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் குமிட்டிபதி, பொன்பரப்பு, வேட்டைக்காரமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டுமென தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் வெ.சுப்பிரமணியன், செயலர் ப.பா.ரமணி உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் பேசினோம்.
“தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிய, கல்வெட்டுகள், அகழ்வாய்வுகளுடன், பாறை ஓவியங்களும் புறச்சான்றுகளாகத் திகழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், கொங்கு மண்டலத்தின் இதயப் பகுதியான கோவையில், குமிட்டிபதி, வேட்டைக் காரன்மலை, பொன்பரப்பி உள்ளிட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பழங்குடி மக்களின் வேட்டையாடுதல், நடனம், திருவிழா போன்றவற்றைச் சித்தரிக்கும் இந்த ஓவியங்கள், ஏறத்தாழ 3,500 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. ஆனால், எவ்விதப் பாதுகாப்புமில்லாத இந்த ஓவியங்கள், பொறுப்பற்ற நபர்களால் கிறுக்குதல், பெயர்களை எழுதுதல் என பல வகைகளில் சேதப் படுத்தப்பட்டு, அழியும் நிலையில் உள்ளன.
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள வேலந்தாவளம் அருகே பதிமலையில் வரலாற்றுக்கு முற்பட்ட இனக் குழுவினர் வாழ்ந்த குகைத் தளத்தில், வெண்மை நிற ஓவியங்கள் காணப்படுகின்றன. யானையைக் கட்டுப்படுத்தும் பாகன், மனிதர்கள் தேர் இழுத்தல், படகு இழுக்கும் மனிதர்கள் என பாறை இடுக்குகளில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து மேற்கே கோவனூர் செல்லும் சாலையில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பொன்பரப்பு மலை உள்ளது. இங்குள்ள குகை தளத்தில் வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு, தீப்பந்தம் ஏந்திய மனிதர்கள் என 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன.
இவை, ஆதி மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த வெள்ளியங்கிரி மலை அருகேயுள்ள வேட்டைக்காரன் மலை குகை ஓவியங்களில், இனக்குழு மனிதர்கள் கைகோர்த்து நடனமாடுவது, யானை மீது அமர்ந்து வேட்டையாடுவது, விலங்குகள் ஆகிய ஓவியங்கள் காணப்படுகின்றன.
பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பாறை ஓவியங்கள் காணப்படும் இடங்களில், இரும்புத் தடுப்புகள் அமைத்தல், காவல் பணியாளர்களை நியமித்தல், எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே கொங்கு வரலாற்று ஆர்வலர்கள், தொல்லியாளர்கள், கலை, இலக்கியப் பெருமன்றத்தினர் என அனைவரின் எதிர்பார்ப்பு” என்றனர்.