செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன், திராவிட கட்சிகள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளதால், 2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம், செங்கல்பட்டில் மாவட்டத் தலைவர் பலராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். வரும் மார்ச் மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் கட்சியில் 1 கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை முதல் முறையாக இந்தக் கூட்டத்தில் அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தர்ராஜன் தமிழக அரசு முற்றிலும் முடங்கிப் போய் உள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், ‘அத்தியாவசிய பொருட்களான பால், மின் கட்டணம் ஆகியவற்றின் விலை, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உயர்ந்துள்ளதற்கு மாநில அரசே காரணம். தீவிரவாத ஊடுருவல் இல்லாத தமிழகத்தில், தற்போது ஐஎஸ்ஐ உளவாளிகளின் அச்சுறுத்தல் உருவாகியிருப்பது கவலை அளிக்கிறது.
பாஜ தலைமை அலுவலகம் மற்றும் முக்கிய தலைவர்களைத் தாக்கப்போவதாக நேற்று மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம், இதை உறுதிபடுத்துவதாக உள்ளது’ என்று அவர் தெரிவித்தார். ‘இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை, சட்ட நடவடிக்கைகள் மூலமே மீட்க முடியும். இலங்கைக்கான இந்திய தூதர் மூலம், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் ஊழல் வழக்குகளில் சிக்கி தவித்து வருவதால், அவை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. தமிழக காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும்.
தமிழகத்தை, குஜராத்தைப் போன்று மதுக் கடைகளே இல்லாத மாநிலமாக மாற்றுவோம்’ என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாநில செயலாளர் கே.டி. ராகவன், காஞ்சி கோட்ட அமைப்புச் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.