தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 5,500 ஏக்கர் நிலம் பாசனம் பெற உதவும் 560 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குப்பை மேடானது.
இந்நிலையில், குளத்தை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் எனத் தீர்மானித்த இப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து, கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி, சொந்த செலவில் பெரிய குளத்தைத் தூர் வாரும் பணியை கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்கினர்.
இதற்காக பலரும் உதவி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்- கார்த்திகா தம்பதியரின் மகனான 8-ம் வகுப்பு மாணவர் தனிஷ்க்(14), தனது சிறுசேமிப்பு தொகையை தூர் வாரும் பணிக்காக வழங் கினார். இதுகுறித்து சு.தனிஷ்க் கூறியபோது, “வருங்கால தலைமுறை பயனடைவதற்காக தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ள உங்களுக்கு என்னால் முடிந்த 7 மாத சிறுசேமிப்பை தருவதில் மகிழ்கிறேன்” என்றார்.
அந்தச் சிறுவனின் முன்னிலையில் உண்டியலைத் திறந்து எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.876 இருந்தது.
இதுகுறித்து தூர் வாரும் பணியை ஒருங்கிணைக்கும் இளைஞர்கள் கூறியபோது, “இவ்வளவு பெரிய குளத்தை எப்படித் தூர் வாரப் போகிறோம் என்று மலைத்தோம். ஒவ்வொரு நாளும் தானாக முன்வந்து இயன்ற உதவிகளைச் செய்வோரால் அந்த மலைப்பு அகன்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றனர்.