மக்கள் மீது மத்திய அரசு சுமைகளை சுமத்தினால் அதை எதிர்த்து தமிழக அரசு குரல்கொடுக்கும் என்றார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு வழித்தடங்களில் இயங்கக்கூடிய 12 புதிய பேருந்துகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், "தமிழக மக்களை பாதிக்காத வகையில் பால் விலையை உயர்த்தும் பணி இருக்கும். ஏழைகள் இல்லாத உலகத்தை படைப்பதற்காக எடுத்துள்ள முயற்சி தான் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்.
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை தலைவர் என்று சொன்னாலும் அவர் கட்சியை விட்டு போகும் ராசி தான் ஸ்டாலினுக்கு உள்ளது. தமிழகத்தில் அதிமுக தான் மக்கள் இயக்கம் என்பதை திமுக தலைவா் ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறார். எனவே, முதலைமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவில் சேர்ந்து கொள்ளலாம்.
மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இந்தியாவில் முன்னோடி திட்டமாக கொண்டு வந்தது ஜெயலலிதா. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தைத்தான் தற்போது திமுக தலைவா் ஸ்டாலின் மக்கள் மத்தியில் விளம்பரம் செய்கிறார்.
தமிழக அரசு வலியுறுத்தும் திட்டங்களை நிறைவேற்றும் அரசாக மத்திய அரசு இருக்கின்ற காரணத்தால் தமிழக அரசு இனி வளமாகவும் நலமாகவும் இருக்கும்.
மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுமையைதான் மத்திய அரசு மக்கள் மீது வைக்கும். அதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால், மக்கள் சுமக்க முடியாத சுமைகளை மக்கள் மீது மத்திய அரசு வைத்தால் அதை எதிர்த்து தமிழக அரசு குரல் கொடுக்கும்" என்றார்.