தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. போதுமான அளவு மழை பெய்யாததால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழுவதுமாக வறண்டுவிட்டன. பொது மக்கள் தண்ணீருக்காக குடங்களை எடுத்துக் கொண்டு வீதிகளில் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களில் சிலர் தண்ணீர் லாரிகள் வரும் பொழுது வரிசைகளில் நின்று நீரைப் பிடித்துக் கொள்கிறார்கள். அன்றாடத் தேவையான தண்ணீருக்கு மாற்று இல்லாததால் சிலர் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீரை அதிக அளவில் காசு கொடுத்துப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் மாவுக்கடைக்காரரின் தண்ணீர் குறித்த நூதன விளம்பரம், மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் சி.கே.ஆர். குப்தா என்பவர் 'எல்லம்மன் மாவுகள்' என்ற இட்லி, தோசை மாவுக் கடையை வைத்திருக்கிறார். இவர் இந்த மாவுக் கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இவர் கடையின் நுழைவாயிலில் ஒரு விளம்பரப் பதாகையை (Banner) வைத்துள்ளார் அதில் ''1 கிலோ இட்லி அல்லது தோசை மாவு வாங்கினால் 1 குடம் நிலத்தடி நீர் இலவசம்'' என்று எழுதிவைத்துள்ளார். அவரிடம் சென்று எதற்கு மாவு வாங்கினால் தண்ணீர் தருகிறீர்கள் என்றும் எதனால் இந்த யோசனை வந்தது என்றும் கேட்டோம்.
அதற்கு அவர், ''சென்னையில் தண்ணீர்ப் பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் தண்ணீர்ப் பிரச்சினையால் என்னிடம் வேலை செய்பவர்களும் வேலைக்கு தாமதமாக வருகின்றனர். மாவு அரைத்து கொண்டிருக்கும்பொழுது இயந்திரத்தைத் திடீரென பாதியில் நிறுத்தி, தண்ணீர் லாரி வந்து விட்டது; வீட்டுக்குச் சென்று தண்ணீர் பிடித்துவிட்டு வருகிறேன் என்று கூறுவார்கள்.
அப்போது தோன்றியதுதான் அந்த யோசனை. 1 கிலோ மாவு வங்கினால் ஒரு குடம் தண்ணீர் தரலாம் என்று யோசித்தோம். அத்துடன் அந்த தண்ணீருக்குக் காசு எதுவும் வாங்காமல் இலவசமாகவே தரலாம் என்றும் முடிவுசெய்தோம்'' என்கிறார் குப்தா.
தண்ணீர் எங்கிருந்து உங்களுக்கு வருகிறது என்று கேட்டதற்கு, ''ரெட் ஹில்ஸ் காரனோடை என்ற இடத்தில் நிலத்தடி நீர் நன்றாக கிடைக்கிறது. 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூ. 200 க்கு வாங்குகிறோம். ஆனால் லாரி வாடகை, ஆள் கூலி எல்லாம் சேர்த்து ரூ.3,000 வந்துவிடுகிறது. வெளியில் இருந்து வாங்கும் தண்ணீர் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. ஒரு பாதுகாப்புக்காக தண்ணீரைக் காய்ச்சி குடித்தால் நல்லது என்று விளம்பரத்தில் போட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார் குப்தா.
தமிழகம் முழுவதுமே தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இம்மாதிரியான வித்தியாச முயற்சிகளை மனதார வரவேற்கலாம்.