திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா முக்கியமானது. இவ்வாண்டுக்கான திருவிழா இன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறுகிறது.
விழாவையொட்டி மங்கள இசை, திருப்புகழ் இசை, சொற்பொழிவு, நடேச நாட்டியாலயா பரதநாட்டிய பள்ளி மாணவியரின் பரதநாட்டியம், வாசுகி மனோகரின் பக்தி சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் இரவு 11 மணிவரை நடைபெறவிருக்கிறது.
விழாவின் 2-ம் நாளில் காலை 8.30 மணிக்கு வெள்ளிச்சப்பரத்தில் சுவாமி அம்மன் திருவீதியுலாவும், இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் 3-ம் நாளில் காலை 8.30 மணிக்கு சுவாமி வெள்ளி கற்ப விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் இரவு 8 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறுகிறது.
இதுபோல் தினமும் காலை 8.30 மணிக்கும் இரவு 8 மணிக்கும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறுகிறது. இதுபோல் மாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குமேல் 9.30 மணிக்குள் தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணிக்குமேல் 5.30 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருள்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, மண்டல தணிக்கை அலுவலர் மூ. ராஜேந்திரன், உதவி ஆணையர் தி. சங்கர், நிர்வாக அதிகாரி பா.ரோஷிணி, ஆய்வாளர் ந. கண்ணன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.