உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் விவரங்கள், ஆங்கில மொழியில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி, ஆங்கிலத்துடன் இந்தி, அஸ்ஸாமி, கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மென்பொருளை உச்ச நீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநில உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அளவிலான மேல்முறையீட்டு வழக்குகள் வருகிறதோ அந்த மாநில மொழிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த 5 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது.
அலுவல் ரீதியாக பயன்படுவதற்கான அத்தனை கட்டமைப்புகளும் தமிழ் மொழிக்கு உண்டு. ஆகவே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்க வேண்டும்", என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.