தமிழகம்

பொறியியல் படிப்புக்கான பொது ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான பொது ஆன்லைன் கலந்தாய்வு இன்று (ஜூலை 3) தொடங்கியது. முதல் சுற்றில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்று, கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பர்.

பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 1 லட்சத்து 72 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் சேர 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், அவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றனர்.

பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் கலந்தாய்வும் சிறப்புப் பிரிவினர் மற்றும் தொழிற்கல்விப் பிரிவினருக்கு நேரடிக் கலந்தாய்வும் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

நேரடிக் கலந்தாய்வு கடந்த ஜூன் 28-ம் தேதியோடு நிறைவுபெற்றது. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று (ஜூலை 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கலந்தாய்வு 5 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்றில் சுமார் 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள்.

முதலில் அவர்கள் கலந்தாய்வுக்கான கட்டணத்தை (ரூ.5,000. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000) ஆன்லைனில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செலுத்த வேண்டும்.

அதன்பிறகு பிடித்தமான கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைனில் தேர்வுசெய்யக் குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

இந்த ஆணையைப் பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT