தமிழகம்

ஆம்பூர் அருகே ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமி தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

சரவணன் A

ஆம்பூர் அருகே ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமி தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மல்லிகை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (43). சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (35). இவர்களது மகள் திவ்யதர்ஷினி (7), மகன் லோகேஷ் (5). இருவரும் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள இந்து ஆரம்ப பள்ளியில் படித்து வந்தனர். மல்லிகைதோப்புப்பகுதியில் இருந்து தினந்தோறும் ஆட்டோவில் இருவரும் பள்ளிக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வழக்கம்போல் ஆட்டோவில் திவ்யதர்ஷினியும், லோகேஷூம் பள்ளிக்கு சென்றனர். ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்தி (34) என்பவர் ஆட்டோவை ஓட்டிச்சென்றார். மல்லிகை தோப்பு பகுதி வழியாக சென்ற போது அங்கு குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குண்டும், குழியுமாக சாலையில் ஆட்டோ வேகமாக சென்றபோது ஓட்டுநர் கார்த்திக்கு அருகாமையில் அமர்ந்திருந்த திவ்யதர்ஷினி தவறி கீழே விழுந்தார்.

அப்போது, ஆட்டோவின் பின் சக்கரம் சிறுமி மீது ஏறி இறங்கியதில், அவர் படுகாயமடைந்தார். உடனே, சிறுமி மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து முனுசாமி, பத்மாவதி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு திவ்யதர்ஷினி உடலை பார்த்து கதறி அழுதனர். விபத்துக்கு காரணமாக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஆம்பூர் டவுன் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்து பேச்சவார்த்தை நடத்தினர். பிறகு ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர். இதையேற்ற சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர் நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் புதைக்கும் பணிகளும், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான பணிகளும் நடைபெற்று  வருகிறது. இதனால், நகரம் முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாகவே காணப்படுகிறது. இதனால், ஆம்பூர் நகர மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

தரமற்ற சாலைகளில் பயணிக்கும் போது நிதானமாக சென்றால் மட்டுமே விபத்துஇல்லாமல் செல்ல முடியும் என்ற நிலை ஆம்பூரில் நிலவி வருகிறது. இதுபோன்ற சாலையில் அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றதால் ஒரு சிறுமியின் உயிர் பரிபோனது குறிப்பிடத்தக்கது. எனவே, நகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை இனியாவது சீர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT