பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டணியின் அமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.
9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் கஜா புயல் பாதிப்பு காரணமாக அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின்னர் ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறிய தமிழக அரசு பின்னர் நிறைவேற்ற முடியாது என மறுத்தது. இந்நிலையில் மானியக் கோரிக்கையில் தங்களுக்குச் சாதகமாக அறிவிப்பு வரும் என ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் எவ்வித அறிவிப்பும் வராததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இன்று ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் அவரச ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் கூறியதாவது:
“இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகள் சார்ந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
குறைந்தபட்சம் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பாவது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எந்தவித அறிவிப்பும் இல்லை.
எனவே, ஜாக்டோ- ஜியோவின் அவசர மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் அமைந்துள்ள தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மிக முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்க உள்ளது''.
இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.