தமிழகம்

தண்ணீர்ப் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அரசு சமாளிக்கும்: அமைச்சர் வேலுமணி

செய்திப்பிரிவு

தண்ணீர்ப் பற்றாக்குறை எப்போது வந்தாலும் அதைச் சமாளிக்க அரசால் முடியும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குக் கொண்டு வந்த குடிநீரை கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, ''தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  நமக்குக் குடிநீர்ப் பற்றாக்குறைதான், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான் இதற்குக் காரணம். மழையே இல்லாததால்தான் நமக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை எப்போது ஏற்பட்டாலும் அதை அரசால் சமாளிக்க முடியும். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 எம்எல்டி தண்ணீரைப் பெறத் திட்டமிட்டுள்ளோம். இதில் 150 எம்எல்டி தண்ணீருக்கான திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரிவாக்கப்படும்.

அதேபோல மத்திய அரசுடன் பேசி ஜெர்மன் நாட்டு வங்கி மூலமாக 400 எம்எல்டி தண்ணீரைப் பெறவும் திட்டம் தயாராகி வருகிறது'' என்றார் அமைச்சர் வேலுமணி.

SCROLL FOR NEXT