திட்டமிட்டுப் பறிக்கப்படும் சமுகநீதி, மாநில உரிமைகள் மனித உரிமைகளைக் காக்க, உரிமைக்குக் குரல் கொடுக்க லட்சிய - கொள்கைக் கூட்டணிகளே நாட்டின் இன்றைய தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டுப் பறிக்கப்படும் சமுகநீதி, மாநில உரிமைகள், - மனித உரிமைகளைக் காக்க லட்சிய கொள்கைக் கூட்டணிகளே நாட்டின் இன்றைய தேவை என வீரமணி தெரிவித்துள்ளார் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதவெறி, ஜாதிவெறி, பதவி வெறி சக்திகள் தலை விரித்தாடி, முற்போக்கு, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான அணியை, அவர்தம் கொள்கைகளைப் பரப்பும் இயக்கங்களை வீழ்த்திட வீறு கொண்டு ஆயத்தமாகியுள்ளனர்.இந்த கால கட்டம் நாட்டிற்கு மிக முக்கியமான கால கட்டமாகும்.
நெருக்கடி நிலையை - 44 ஆண்டுகளுக்கு முன்னே பிரகடனப்படுத்திய அந்நாள் காங்கிரஸ் ஆட்சி அதை வெளிப்படையாகச் செய்தது;
இந்நாளில் மீண்டும் பெரும் பலத்தோடு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி பல்வேறு உருமாற்ற தந்திரோபாயங்களுடன் தனது பணிகளை
ஆட்சி பலம் முதலாளிகள் (கார்ப்பரேட்டுகளின்) பண பலம் ஊடகங்கள் பலம் வன்முறைச் சக்திகளின் பலம் மூலம் வெற்றி பெற வியூகங்களை வேகமாக வகுத்து, தீவிரமாகச் செயல்படத் துவங்கியுள்ளன!
சமுகநீதி தலை தாழாமல் பறக்க வழிகாட்டும் தமிழ் மாநிலம்
தமிழ்நாடுதான் அனைத்து இந்தியாவுக்கும் ஆன உரிமைப் போர், விழிப்புணர்வுப் பிரச்சாரம் இவைகளை செய்து, அனைவருக்கும் அனைத்தும் என்ற சமுக நீதி தலை தாழாமல் பறக்க வழிகாட்டும் மாநிலம் ஆகும். அவ்வகையில் அரசியல் தளத்தில் - களத்தில் தனிப்பெரும் இயக்கமாகவும், தனித்த ஆற்றல் பெற்ற தலைவராக - திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் உயர்ந்து நிற்கிறார்கள்.
அவர்தம் தோள்மீது தாங்கும், வீற்றிருக்கும் கடமைகள் - பொறுப்புகள் இந்திய ஜனநாயகத்தை, அதன் மாண்புகளை, மாநில உரிமைகள் - மதச் சார்பின்மை, சமுகநீதி, சிறுபான்மையினர் - பெரும்பான்மையினர் என்று இல்லாது அனைத்து மனித உரிமைகளையும் காப்பதற்கு சீரிய செயல் திட்டங்களை வகுத்து, வழிநடத்திட வேண்டிய தருணம் ஒவ்வொரு நாளும் வந்து நினைவூட்டுகிறது.
ஒத்தக் கருத்துள்ளவர்களைத் திரட்டி களம் காணுவது காலத்தின் கட்டாயம்!
திட்டமிட்டுப் பறிக்கப்படும் சமுகநீதி, மாநில உரிமைகள் - மனித உரிமைகளைக் காக்க ஒத்தக் கருத்துள்ளவர்களை - அனைத்திந்திய அளவில் திரட்டி, விழிகளைத் திறந்து வைத்து, களம் கண்டு, உறவுக்குக் கை கொடுத்து, உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உருவான லட்சிய - கொள்கைக் கூட்டணி வெறும் பதவிக் கூட்டணி அல்ல. அனைத்து இந்தியாவுக்கும் பரவி, ‘நான்’ மறைந்து ‘நாம்’ விரிந்து நாட்டு நலனே பிரதானம் என்ற பரந்த பார்வை, சிறந்த அணுகுமுறையை நிலைநாட்ட ஜனநாயக வழியில் நாட்டை விழிப்போடு பாதுகாக்கும் பணியைச் செய்திட சரியான ஒருங்கிணைப்பு தேவை!
தேர்தல் கூட்டணிகள் - முக்கியமாக லட்சிய, கொள்கைக் கூட்டணிகளே நாட்டின் இன்றைய தேவை. இது எளிதா? என்ற கேள்வி எழலாம். எளிதுதான் - எப்போது?
திமுகவின் பணி தமிழ் மாநிலமும் தாண்டிய பெரும் பணி!
தன்னை, தன் கட்சியை முன்னிலைப்படுத்தாமல் கொள்கை லட்சியங்களை - ஜனநாயகத்தை, மதச் சார்பின்மையை, சமுகநீதியை, மாநில உரிமைகளை, மனித உரிமைகளைக் காக்கும் பணியை முன்னிறுத்தி, முற்போக்குக் கட்சிகளும், தலைவர்களும் சிந்தித்தால் இமைப் பொழுதில் எளிதாகி விடும்! வருமுன்னர் காக்க வேண்டும். அதற்குரிய வழி வகைகளைக் காண வேண்டும். துவக்கம் சிறு புள்ளியாயினும் வரவேற்கத்தக்கதே! எனவே திமுகவின் பணி தமிழ் மாநிலமும் தாண்டிய பெரும் பணி - சிந்தித்து செயல்படுக!
இவ்வாறு கி.வீரமணி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.