தமிழகம்

ராஜராஜ சோழனுக்கு அரசு நினைவாலயம் அமைக்க வேண்டும்: எச்.ராஜா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கும்பகோணத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு நினைவாலயம்  அமைக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்.ராஜா, ''உடையாளூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சமாதியில் அஞ்சலி செலுத்தினேன். தமிழக அரசு உடையாளூரில் நினைவாலயமும் சென்னையில் ராஜராஜ சோழனுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபமும் அமைத்திட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''உடையாளூரில்  ராஜராஜ சோழனுக்கு நினைவாலயம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பெரியவர்களுடைய சமாதியில் சிவன் கோயில் கட்டும் பழக்கம் இந்து மதத்தில் உண்டு.

அரசாங்கம் நினைவாலயம் எழுப்ப முன்வராத பட்சத்தில், மக்களை அழைத்துப் பேசி, நாமே நினைவாலயத்தைக் கட்டலாம். இதில் தவறில்லை, தாராளமாகச் செய்யலாம்'' என்றார் எச்.ராஜா.

சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன.  இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலை இன்றளவும் உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.

இவருடைய சமாதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் போதிய பராமரிப்பின்றி உள்ளது. மிகப்பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்த ராஜ ராஜ சோழனின் சமாதியின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT