தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலர் கே.சண்முகம் நியமிக்கப்பட உள்ளார்.தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிந்து, அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றது. அதன் பின் தலைமைச் செயலாளராக இருந்த கு.ஞானதேசிகனை மாற்றிவிட்டு, ராமமோகன ராவை அந்தப் பதவியில் ஜெயலலிதா நியமித்தார்.
2016-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதா காலமானார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதனால், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, அப்போதைய மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் தலைமைச் செயலாள ராக பணியாற்றிய அவர், நாளை (30-ம் தேதி) ஓய்வு பெறு கிறார்.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலாளரை நியமிக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியது. கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல், மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்போதைய நிதித்துறை செயலாளராக உள்ள கே.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், அரசின் விருப்பத்தை தெரிவித் துள்ளார். புதிய தலைமைச் செயலாளர் நியமனம் தொடர்பான அரசு உத்தரவு விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த 1985-ம் ஆண்டு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான கே.சண்முகம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோது, நிதித் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 9 ஆண்டுகளாக அதே பொறுப்பை வகித்து வருகிறார்.
முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.