தமிழகம்

போலி பயனாளிகளால் கூடுதல் நிதிச்சுமை: 20 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் ரத்தாக வாய்ப்பு

ஹெச்.ஷேக் மைதீன்

தமிழக அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பென்ஷன் தொகைக்கான பயனாளி கள் எண்ணிக்கை 35 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக குறைக்கப் பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை, புகார்கள் காரணமாக 20 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப் படாமல் நிறுத்தி வைக்கும் நடவடிக் கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் முதியோர்கள், ஆதரவற்றோர், விதவைகள், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதி யம் வழங்கப்படுகிறது.

இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் வழங் கப்படுகிறது. இந்திரா காந்தி பெயரிலான தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் மற்றும் விதவைகள் ஓய்வூதியத்துக்காக மத்திய அரசின் சார்பில் முறையே மாதந்தோறும் 60 முதல் 79 வயதினருக்கு தலா ரூ.200, 80 வயதுக்கு மேலானோருக்கு ரூ.500, மாற்றுத் திறனாளிகளில் 18 வயது முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.300 மற்றும் விதவைகளுக்கு 40 வயதுக்கு மேல் 79 வயது வரை ரூ.300 என நிதி வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

இத்திட்டத்தில் இதுவரை 35 லட்சத்து 38 ஆயிரத்து 576 பேர் அங்கீகரிக்கப்பட்டு, ஓய்வூ தியம் பெற்று வந்தனர். முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் அதிக பட்சமாக 16 லட்சம் பேரும் அடுத்த படியாக தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில் 6.41 லட்சம் பேரும் பயன் பெறுகின்றனர்.

தற்போது ஒட்டுமொத்தமாக ஓய்வூதியம் பெறுவோரின் எண் ணிக்கையை 15 லட்சமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த சில மாதங் களாக ஓய்வூதியம் அளிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக சமூக நலத்துறை மற்றும் வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு:

சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 500 ரூபாயாக இருந்த ஓய்வூதியம் 1000 ரூபாயாக மாற்றப்பட்டது. 2013-14ம் ஆண்டில் மட்டும் 4,201 கோடி ரூபாய் ஓய்வூதியமாக ஒதுக்கப்பட்டு, பெரும்பாலும் நிதி வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், இந்தத் திட்டத்தை பயன்படுத்தி வசதியானவர்கள், திடமாக இருப்போர் உட்பட தகுதியற்ற ஏராளமானோர் போலி ஆவணங்களை அளித்து, ஓய்வூதியம் பெறுவது தெரிய வந்துள்ளது. இதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் நோக்கம் கெடுவதுடன், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.

எனவே, கடந்த சில மாதங்களாக வங்கிகளில் தகுதி அடிப்படையில் கணக்கு தொடங்கியுள்ள 10 லட்சம் பேருக்கு மட்டும், ஓய்வூதியம் வழங்கி வருகிறோம். இன்னும் 5 லட்சம் பேர் தகுதியுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். போலி பயனாளிகள், வங்கிக் கணக்கு தொடங்கவில்லை. எனவே, அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. மேலும் வீடு வீடாக சென்று ஓய்வூதியம் பெறுவோர் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் முடிவில் யார் தகுதியான வர்கள் என்று அறியப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டுமே ஜனவரி முதல் ஓய்வூதியம் வழங்கப்படும். போலி பயனாளிகளுக்கு வழங்கப் படாது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT