தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கும் முடிவில் ஜி.கே.வாசன் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சித் தலைமை கலக்கத்தில் உள்ளது.
உறுப்பினர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அன்று இரவே காங்கிரஸ் மேலிடம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி மூலமாக வாசனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தேசிய செயலாளர் அஜய் மக்கான், உறுப்பினர் அடையாள அட்டையில் தமிழக தலைவர்கள் படத்தை போட கட்சித் தலைமை மறுப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.
ஆனால் வாசன் தரப்பினர் இதை ஏற்கவில்லை. தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் உருவாக்குவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இது பற்றி ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் கூறியதாவது:
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து யுவராஜாவை இடைநீக்கம் செய்ததில் ஆரம்பித்து, எங்கள் விருப்பத்துக்கு மாறாக பல செயல்களில் அகில இந்திய தலைமை ஈடுபட்டது. இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்குமாறு ஜி.கே.வாசனிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இப்போதே கட்சியை ஆரம்பித்தால்தான் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த முடியும் என்றும் எடுத்துரைத்தோம். இதைத் தொடர்ந்து அவர் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளார். இது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசிக்கவுள்ளார். புதுக்கட்சி பற்றிய முறையான அறிவிப்பை ஓரிரு நாட்களில் ஜி.கே.வாசன் வெளியிடுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசன் இன்னும் தன் முடிவை அறிவிக்காவிட்டாலும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறும் முடிவில் உறுதியாக உள்ளனர். இதை எடுத்துக்காட்டும் வகையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிரான வாசகங்களுடன் சைக்கிள் சின்னம் அடங்கிய போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாசன் தரப்பு ஆட்கள்தான் காங்கிரஸ் கட்சியில் அதிகளவில் உள்ளனர். ஜி.கே.வாசன் தனிக்கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மேலும் வலுவற்று போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கட்சியின் மாநிலத் தலைவர்கள் பலரும் மேலிடத்தில் எடுத்துக் கூறியுள்ளனர். இதனால் கலக்கமடைந்துள்ள காங்கிரஸ் மேலிடம் கட்சியின் மற்ற மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.