தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை அருகே பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்வதற்காக பதிக்க வைத்திருந்த குழாய்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை தற்போது டேங்கர் லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவு, காலவிரயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனம், பூமிக்கடியில் குழாய் பதித்து, கொண்டு செல்ல முடிவு செய்தது.
இதற்காக, நாகை மாவட்டத்திலிருந்து பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அருந்தவ புரத்தில் பூமிக்கடியில் பதிப்பதற்காக இரும்புக் குழாய்கள் கொண்டு வந்து வயல் பகுதியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வயல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குழாய்களுக்கு நேற்று முன்தினம் நள் ளிரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். குழாய்களின் உட்பகுதியில் ரசாயன பூச்சு இருந்ததால் தீப்பற்றி எரிந்தது. ஆனால், குழாய்களுக்கு பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.