முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் 69 ஆண்டு கால நண்பர் ஆர்.வேங்கடசாமி (89) சேலத்தில் நேற்று முன்தினம் காலமானார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 1949-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக, திரைக்கதை, வசனம் எழுதி வந்தார். அவருக்கு மாடர்ன் தியேட்டர் ஸில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்த சோமு என்பவர் மூலமாக அறிமுக மானவர் ஆர்.வேங்கடசாமி.
சேலத்தில் தனது தாயார் அஞ்சுகம், மனைவி தயாளு மற்றும் குழந்தைகளுடன் குடியேற விரும்பிய கருணாநிதிக்கு, அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த வேங்கடசாமி, சேலம் கோட்டை பகுதியில் ஹமீத் சாகிப் தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து கொடுத்தார். வேங்கடசாமியுடன் அன்று தொடங்கிய நட்பு, கருணாநிதி மறையும் வரை 69 ஆண்டுகளாக தொடர்ந்தது. எம்ஜிஆருடனும் நட்புடன் இருந்தவர்.
அஞ்சல் துறையில் பணி யாற்றி ஓய்வுபெற்றவரான வேங்கடசாமி எழுத்தாளாராக விளங்கியவர். காஞ்சி பெரியவர் குறித்து கருணை நிழல் என்ற புத்தகம் மற்றும் ஏராளமான ஆன்மிக நூல்களையும் எழுதிய வர். மேலும், டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றையும் புத்தக மாக எழுதி உள்ளார். தமிழ் வாகை செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் ஆர்.வேங்கட சாமி பெற்றவர். சேலம் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந் துள்ளார்.
வேங்கடசாமியின் உடலுக்கு திமுக-வினர் உட்பட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர்.