தமிழகம்

சென்னையின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்க 18 ஆண்டுகளுக்கு முன்பே யோசனை கூறினேன்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம்

செய்திப்பிரிவு

ஏரி, குளங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு மீட்டர் ஆழப்படுத்தி, சேமித்து வைத்தாலே சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினையை மிக எளிதாக சமாளிக்கலாம் என்று 18 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதாக சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

சகாயம் ஐஏஎஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''வடகிழக்குப் பருவமழையில்தான் நாம் அதிகம் மழைபெறுகிறோம். மழை பொழியும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நீராதாரங்களை அளிக்கும் ஏரி, குளங்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவற்றை ஒரு மீட்டர் ஆழப்படுத்தி, சேமித்து வைத்தால் போதும். இதன்மூலம் சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினையை மிக எளிதாக சமாளிக்கலாம்.

2001-ல் இதை நான் சொன்னபோது தேவைப்படுவதாக என்னிடம் தெரிவிக்கப்பட்ட குடிநீர்த் தேவையின் அளவு 300 எம் எல்டி. (Million Litre Daily) அதைக் கணக்கிட்டபோது வருடத்துக்கு 12 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. இதை 30 ஆயிரம் ஏக்கரில் 1 மீ. ஆழத்தில் தேக்கினாலே போதும். என்னுடைய அறிக்கையை ஒரேயோர் அதிகாரி மட்டுமே அரசுக்குப் பரிந்துரைத்தார். அதற்குப் பிறகு அந்த யோசனை என்ன ஆனது என்று தெரியவில்லை.

சென்னையின் தண்ணீர்த் தேவையைவிடக் கூடுதலாகவே மழை பெய்கிறது. அதை முறையாக ஏரி, குளங்களில் தேக்கிவைத்தாலே, எளிதான தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்றும் சொன்னேன்.

மழைநீர் சேகரிப்புத் திட்டம், நிச்சயம் சிறப்பான திட்டம். அதிகாரிகள், மக்கள் என எல்லோரும் சேர்ந்து அதைச் செய்தால் மட்டுமே தண்ணீர்த் தட்டுப்பாட்டை ஓரளவுக்காவது நீக்கமுடியும்''.

இவ்வாறு தெரிவித்தார் சகாயம்.

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியமான கதை 

SCROLL FOR NEXT