தமிழகம்

கருணாநிதியுடன் இளங்கோவன் சந்திப்பு

செய்திப்பிரிவு

திமுக தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன்பின் வெளியே வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசியலில் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் மூத்த குடிமகனும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து ஆசி பெறுவதற்காக வந்தேன். அவரும், எனக்கு ஆசி வழங்கினார். இந்த சந்திப்பில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லக்கண்ணு, சங்கரய்யா ஆகியோரையும் சந்தித்து ஆசி பெற இருக்கிறேன். வரும் 12-ம் தேதி முதல் மாவட்டம்தோறும் சென்று காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்க இருக்கிறேன். முதல் கூட்டம் திருநெல்வேலியிலும், இரண்டாவது கூட்டம் கன்னியாகுமரியிலும் நடைபெறும். வரும் 14-ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில், நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. திமுகவுடனான கூட்டணி பற்றி நான் எதுவும் பேச முடியாது. கூட்டணி பற்றி சோனியாகாந்தி தான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் வாசன் பற்றி கேட்டதற்கு, இந்த நல்ல நேரத்தில் சிலரை பற்றி பேச விரும்பவில்லை. ஜி.கே.வாசனைப் பற்றி நிறைய பேசிவிட்டேன். இனிமேல் அவரைப் பற்றி பேசமாட்டேன் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT