தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக் கூடாது; நீட் அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோவையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர்கள் சிலர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் நேற்று மாலை (புதன்கிழமை) ஒப்புதல் அளித்தன. இதை தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) ஒப்படைக்க இருப்பதால் எந்நேரமும் சட்டம் இயற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக் கூடாது; நீட் அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோவையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர்கள் சிலர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் தங்களை நேரில் சந்தித்து தங்களிடம் பேசினால் மட்டுமே கலைந்து செல்வோம் என மாணவர்கள் பிடிவாதம் காட்டி வருகின்றனர். தமிழக அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் எனப் பல்வேறு பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வில் தாங்கள் நல்ல மதிப்பெண் எடுத்துள்ள நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளித்தால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.