சென்னை: முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 பேரும் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, மே 4-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக விஜய் 10-ம் தேதி பதவியேற்றார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்துள்ளார்.
புதிய எம்எல்ஏக்கள் 233 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக தற்காலிக பேரவைத் தலைவராக சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. பேரவைக்குள் முதல்வர் விஜய் காலை 9.26 மணிக்கு வந்தார். பேரவைச் செயலர் கி.சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் ஆகியோர் மேஜையைத் தட்டி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
9.30 மணிக்கு அவை தொடங்கியது. புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை பேரவைச் செயலர் கி.சீனிவாசன் அறிவிக்க, ஒவ்வொருவராக வந்து உறுதிமொழியை வாசித்து எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
முதலாவதாக காலை 9.35 மணிக்கு முதல்வர் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்றார். தொடர்ந்து, என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியேற்றனர். பின்னர், தமிழ் எழுத்து அகர வரிசைப்படி இதர எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
தவெக எம்எல்ஏக்கள் சிலர் உறுதியேற்கும்போது, மேஜையில் முதல்வர் விஜய் படத்தை வைத்துக் கொண்டனர். ஆளும்கட்சியான தவெகவில் உறுப்பினர்கள் பலரும் புதியவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை மூத்த அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது வழங்கிவந்தார். அவைக்குள் முதல்வர் வந்தபோதுகூட, மற்ற உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்திருக்க, செங்கோட்டையன் மட்டுமே எழுந்து நின்று, மேஜையைத் தட்டி வரவேற்றார். அவரைப் பார்த்த பிறகே, மற்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று, மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
பதவியேற்பு முடிந்ததும் பேரவை நிகழ்வுகள் நிறைவு பெறுவதாக அறிவித்த தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா, “12-ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடும். அப்போது பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும்’’ என்று அறிவித்தார். இந்த தேர்தல் முடிந்து இருவரும் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பேரவையில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் குழப்பம் நிலவி வரும் சூழலில், பழனிசாமி - எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு குழுக்கள் தனித்தனியே செயல்படுவதை சட்டப்பேரவையில் வெளிப்படையாக காணமுடிந்தது. முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்த விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சிலர், பழனிசாமிக்கு வணக்கம் தெரிவிப்பதை தவிர்த்தனர். பேரவை வளாகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் எஸ்.பி.வேலுமணி சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தாமதமாக பதவியேற்ற சண்முகம்: சான்றிதழை மறந்த அமைச்சர் - பேரவையில் நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வின் போது, அமைச்சர்கள் வரிசையில் கடைசியாக கீர்த்தனா அழைக்கப்பட்டார். எம்எல்ஏவாக பதவியேற்கும் முன்பு அனைவரும் தேர்தல் வெற்றிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். எனவே, அனைவரும் சான்றிதழை எடுத்து வருமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் கீர்த்தனா கொண்டு வரவில்லை. சான்றிதழை சமர்ப்பித்த பிறகே பதவியேற்க முடியும் என்று பேரவைச் செயலர் கூறினார். இதையடுத்து, உதவியாளர் மூலம் சான்றிதழை வீட்டில் இருந்து கொண்டுவரச் செய்து, கடைசியாக கீர்த்தனா பதவியேற்றுக் கொண்டார்.
மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பதவியேற்க நேற்று காலை பேரவைக்கு வந்தார். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அவையில் இருந்து வெளியேறினார். அவை நிகழ்வுகள் முடிந்த பிறகே திரும்பி வந்தார். இதனால், மதியம் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையாவின் அறையில் அவரது முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.