உலக இலக்கியத்தின் உச்சமாக கம்பராமாயணம் திகழ்கிறது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் புகழாரம் சூட்டினார்.
சென்னை கம்பன் கழகம் சார்பில் 3 நாள் கம்பன் விழா நேற்று முன்தினம் (ஆக. 11) சென்னையில் தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருது வழங்கப்பட்டது. மேலும் இதில் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், காந்தி கண்ணதாசன், சாரதா நம்பி ஆரூரன், சாந்தகுமாரி சிவகடாட்சம் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கினார்.
நிகழ்வில் அவர் பேசியதாவது: உலகில் சிறந்து விளங்கும் நாடுகள் எல்லாம் தங்களது சொத்தாக நினைப்பது அறிஞர்களைத்தான். மண், பண்பாடு, கலா்ச்சாரம் சார்ந்த அனைத்தையும் தங்கள் படைப்புகளில் அறிஞர்கள் நிலை நிறுத்தியுள்ளனர். அந்த வகையில் கால வெள்ளத்தால் அழிந்து போகாமல் இருப்பது கம்பராமாயணம் ஆகும். அது கம்பர் அளித்த அரும்பெரும் கொடையாகும்.
மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட உலக இலக்கியத்தின் உச்சம் எது என்றால் அது கம்பராமாயணம் ஆகும். தமிழ் எனும் ஆதி விதியை உயர்த்திப் பிடிக்கக் கூடிய படைப்பு கம்பராமாயணம். அது மண்ணையும், மாண்பையும் உயர்த்திப் பிடிக்கிறது.
இயற்கை, காடுகள், மரம், செடி, மாந்தர்கள், வீரம், வெற்றி, தோல்வி உள்ளிட்டவற்றை மண்ணுக்கே உரிய முறையில் கம்பர் ஆண்டு இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு மனிதனின் உடல் முழுவதும் நிறைந்து இருப்பது மொழியாகும். அப்படிப்பட்ட மொழிகளிலேயே உலகத்தின் முதல் மொழி தமிழ். அந்த அற்புதமான மொழிக்கு கம்பர் தந்த அற்புதமான கொடை கம்பராமா யணம்.
எந்த மொழியாலும் பாதிக்கப்படாமல் இருப்பதும் தமிழ். அது தனிமொழி. காலச் சக்கரங்களைத் தாண்டி இளமையாக இயங்கி வரும் மொழி. மேலும் அது இறை மொழி. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீர்மிகு முறையில் தமிழ் இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
கம்பராமாயணத்தை வைணவ படைப்பாக பலர் பார்க்கின்றனர். ஆனால் திருமூலரையும் திருக்குறளையும் பல இடங்களில் அவர் பயன்படுத்தியுள்ளார். கம்பராமாயணத்தில் பல பாடல்கள் சிவனை போற்றியுள்ளன. இவ்வாறு செய்ததன் மூலம் கடவுள் என்பவன் ஒருவனே என உயர்த்திப் பிடித்துள்ளார் கம்பர். அவர் அறத்தோடு இணைந்து சென்றவர்.
இவ்வாறு ஆர். மகாதேவன் பேசினார்.
பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நீதிபதி இரா. சுரேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். இதில் கம்பன் கழகத் தலைவர் இராம. வீரப்பன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.