தமிழகம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஏற்காட்டில் கோடை விழாவை தொடங்கி வைத்த பின் சேலம் வந்த முதல்வர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’’சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை விரைவில் திறந்துவைப்போம். அது சட்டமன்றத்தையே பெருமைப்படுத்தும் விஷயமாகும். ஜெயலலிதா மக்கள் மனதில் இன்னும் குடிகொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள அவரின் நினைவிடத்துக்கு தினந்தோறும் சுமார் 30,000 பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த எண்ணிக்கை 50,000 ஆக இருக்கிறது. மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் செல்வாக்கை எதிர்க் கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அணி அணியாகச் சென்று முதல்வரிடம் அமைச்சர் பதவி கோரியதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று முதல்வர் தெரிவித்தார்.

மேலும் எம்எல்ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் கூறினார். அதிமுகவின் இரு அணிகள் இணைப்பை பொறுத்தவரை விரைவில் நடக்கும் என்று தான் நம்புவதாக கூறிய அவர், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

SCROLL FOR NEXT