கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காமல் 432 கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மார்க்கெட் வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட் பூ, பழம், காய்கறி என 3 பிரிவாக இயங்கி வருகிறது. இம்மார்க் கெட்டை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கீழ், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு நிர்வகித்து வருகிறது. இங்கு மொத்தம் 3,157 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மார்க்கெட்டில் கடை வைத்திருப்போர் குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை சட்ட விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடை உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். கடையின் அளவுக்கேற்ப சதுர அடிக்கு ரூ.1 வீதம் பராமரிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
கோயம்பேடு மார்க்கெட்டில் நிர்வாகக் குழு கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு கலைக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மார்க்கெட்டில் நடைபெற வேண்டிய பராமரிப்புப் பணிகள் முடங்கின. குடிநீர், கழிப் பறை வசதியின்மை, குப்பைகள் தேக்கம், ஆக்கிரமிப்புகள் என பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கின. உரிமம் புதுப்பித்தல், பராமரிப்பு கட்டணம் வசூலித்தல் ஆகிய பணிகளும் முறையாக நடைபெறவில்லை.
இது குறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது: கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது 3,157 கடைகளில் 2,725 கடைகள் மட்டுமே எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி, தாங்களாகவே முன்வந்து கடைகளுக்கான உரிமங்களை புதுப்பித்துக்கொண்டனர். ஆனால் 432 கடைகள் கடந்த 2012 ஏப்ரல் முதல் 2014 நவம்பர் மாதம் வரை தங்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் கடை நடத்தி வருகின்றனர். வரும் மார்ச் மாதம் அடுத்த உரிமம் புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ள நிலையில், 432 கடைகள் இதுவரை உரிமம் புதுப்பிக்காததால் அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மார்க் கெட் நிர்வாகக் குழு இல்லை. அதனால் வசூலிக்க முடிய வில்லை. தற்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திக்கை தலைவராகக் கொண்டு, மார்க் கெட் வியாபாரிகள், மக்கள் பிரதி நிதிகள் ஆகியோரைக் கொண்ட மார்க்கெட் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இனியாவது உரிமம் புதுப்பிக்கா தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது நிர்வாகக் குழு அமைக் கப்பட்டுள்ள நிலையில், உரிமத்தை புதுப்பிக்காத 432 கடை களுக்கு நோட்டீஸ் வழங்கி, சீல் வைத்து வருகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட கடை களுக்கு சீல் வைக்கப்பட்டு, அபராதத் தொகையுடன் உரிமக் கட்டணம் பெற்று, கடையை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துக் கடைகளி டமும் அபராதத்துடன் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும்” என்றனர்.