பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை கொலை செய்ய முயன்ற வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கலான மனு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
2011 அக். 28-ம் தேதி ஊழலுக்கு எதிரான யாத்திரைக்காக எல்.கே.அத்வானி மதுரை வந்திருந்தார். அவர் திருமங்கலம் வழியாக ராஜபாளையத்துக்கு வேனில் சென்றபோது ஆலம்பட்டி பாலத்தில் பைப் குண்டு வைத்து அத்வானியைக் கொல்ல முயற்சி நடைபெற்றது.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த தர்வீஸ் மைதீன், அப்துல்லா என்கிற அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அத்வானி கொலை முயற்சி வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து தர்வீஸ் மைதீன், அப்துல்லா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்புப் புலனாய்வு பிரிவு ஏஎஸ்பி மாரிராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் உடன் அப்துல்லா, தர்வீஸ் ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்க, சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் சட்டப்படிதான் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தவறு இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. பின்னர், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.