தினகரனுக்காக என் உயிரையும் கொடுப்பேன் இப்படி அதிமுக தலைமை அலுவலகம் முன் கோஷமிட்ட தொண்டர் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரை போலீஸார் அப்புறப்படுத்த முயற்சித்தபோதும் அவர் சற்றும் அசராமல் கோஷமிட்டவாறே இருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இந்த சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட சின்னத்துக்காக இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. ஆனால், இரு அணிகளுக்கும் சின்னம் கிடைக்கவில்லை. சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக என்ற கட்சிப் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என இரு அணிகளும் புதிய நாமத்துடன் தேர்தலை எதிர்கொள்ள தயாரான சூழலில் தேர்தலும் ரத்தானது.
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் தர டிடிவி.தினகரன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரில் தற்போது தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தினகரன் கைதாகியுள்ள நிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன.
அப்போது அதிமுக தலைமை அலுவலக பகுதியில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த திம்மராயப்பா என்ற தொண்டர் கடும் ரகளையில் ஈடுபட்டார். டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர் தினகரனுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார். இதனையடுத்து போலீஸார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து கூச்சலிட்டு வந்தார். அவருக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என போலீஸார் கூறினார்.
கையில் பையுடன், சட்டையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் புகைப்படங்களுடன்.. சின்னம்மாவின் குடும்பத்தை மறக்க மாட்டோம் என்ற கோஷத்துடன் சுற்றித்திரிகிறார் திம்மராயப்பா.
போலீஸார் கூறுவதுபோல் அவர் உண்மையிலேயே மனநலன் பாதிக்கப்பட்டவர்தானா இல்லை அதிமுகவின் பலம் என முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல் பலம் பொருந்திய தொண்டர்களில் ஒருவரா.
இரு அணிகளும் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுக என்ற கட்சி தனிநபர்களால் ஆனது அல்ல இப்படிப்பட்ட தொண்டர்களால் ஆனதுதான் என்பதை உணர்வார்களா?