தமிழகம்

கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பல்கலைக்கழக தேர்வு ரத்து

செய்திப்பிரிவு

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தேர்வு ரத்து:

மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் இன்று நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

மேலும் 2 நாட்களுக்கு மழை:

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு நோக்கி, தமிழகம் அருகே நகர்ந்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே நிலை கொண்டு உள்ளது.

இதனால், தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளின் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகம், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மாநகரைப் பொருத்தவரையில் ஒரு சில நேரங்களில் நகரில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு:

புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 7 செ.மீ., நாங்குநேரி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆகிய இடங்களில் 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருவள்ளூர் மாவட்டம் புழல், மாதவரம் 4 செ.மி.பெய்துள்ளது.

மேட்டூரில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் இன்று காலை 9 மணி முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT