அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கு இந்த வாரத்தில் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1992 -93, 1993 - 94 ஆகிய நிதியாண்டுகளில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக கடந்த 1996-ல், வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 18 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவர்கள் விலக்கு பெற்றனர்.
மனுத்தாக்கல்
இந்த விவகாரம் தொடர்பாக உரிய அபராதத் தொகையை செலுத்தி, வழக்கில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்ப தாக ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் வருமான வரித்துறையி டம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு வருமான வரித் துறை யின் பரிசீலனையில் இருந்ததால் எழும்பூர் நீதிமன்றத்தில் நடை பெற்றுவரும் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவை வருமான வரித்துறையினர் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வரும்போது, சமரச மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரிவழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.