தமிழகம்

திமுகவுடன் கைகோர்க்கும் வைகோ: விமானப் பயணத்தின்போது ஸ்டாலினுடன் ஆலோசித்தது என்ன?

செய்திப்பிரிவு

தமிழக அரசியலில் புதிய கூட்டணி அமைவதற்கான அறிகுறிகள் உருவாகி வருகிறது. இதற்கு முன்னோடியாக பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திருமண நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் ஸ்டாலி னும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் சந்தித்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று முன்தினம் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போதும், பயணம் முடிந்து விமான நிலைய அறையிலும் அவர்கள், நீண்ட நாள் கழித்து மனம் விட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

திமுக அணிக்கு மதிமுக வரவேண்டும் என்று மக்களவை தேர்தலிலிருந்தே அழைப்புகள் வந்தன. ஆனால் இதனை ஏற்க வைகோ மறுத்துவிட்டார். ஈழத்தமிழர் பிரச்சினைக்கு விடிவு காலம் ஏற்படும் என்று நம்பி பாஜகவுடன் கைகோர்த்தோம். ஆனால் அது நிறைவேறவில்லை.

மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மதிமுகவினர் அதிகளவில் எம்.பி., எம்.எல்.ஏ போன்ற பதவிகளில் இல்லாததால் மக்கள் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தொண்டர்கள் உற்சாகமிழந்து உள்ளனர்.

இதையுணர்ந்த வைகோ, தொண்டர்களின் மனநிலையை சோதிக்கும் விதமாக பூந்தமல்லி மாநாட்டில், திமுகவை புகழ்ந்து பேசினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து திமுக பக்கம் செல்வதை மதிமுக வினர் விரும்புவதை வைகோ உணர்ந்தார். இதற்கு அச்சாரமிடும் நிகழ்வாக பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழாவில் வைகோவும் ஸ்டாலினும் சந்தித்தார்கள். இதைத்தொடர்ந்து விமான பயணத்தின்போதும் மனம்விட்டு பேசியுள்ளார்கள்.

அப்போது வைகோவின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஸ்டாலினும் தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வைகோவும் விசாரித்துக்கொண்டனர். தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் வலுவான அணியை உருவாக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூற வைகோ பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT