தமிழகம்

கனமழையால் சென்னை சாலைகள் சேதம்: ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை - மாநகராட்சி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள் ளாகியுள்ளனர். பழுதடைந்த சாலைகளை அமைத்த ஒப்பந் ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி நெடுஞ்சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கியது. அத்துடன் சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரதான சாலைகளின் நிலையே இப்படியிருக்க உட்புறச் சாலை களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. தரமணி காந்திநகரில் ராஜாஜி தெரு, கபாலி தெரு, இந்திரா காந்தி தெரு,மசூதி தெரு, பெரியார் தெரு, விவேகானந்தர் தெரு, நெய்தல் தெரு, முல்லை தெரு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட பல உட்புறச் சாலைகளில் நீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் ஓடியது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

மழை காரணமாக சென்னையின் பல இடங்களில் வீடுகளில் நீர் புகுந்து விட்டது. திருவல்லிக்கேணியில் வசிக்கும் ஜெயலஷ்மி இதுபற்றி கூறும் போது, “மழைக்காலம் வந்தால் வீட்டில் உள்ள பாத்திரங்கள், குழந்தைகளின் புத்தகங்கள் அனைத்தையும் உயரமான இடத்தில் வைத்து விடுவோம். மழை நீரை மாநகராட்சி வந்து வெளி யேற்றும் வரை காத்திருக்காமல் நாங்களே எடுத்து வெளியில் ஊற்றி விடுவோம்” என்றார்.

அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச் சர்கள் எஸ்.பி.வேலுமணி, எஸ். கோகுல இந்திரா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் மண்டல அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. பல்வேறு இடங்களில் பம்புசெட்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.

கருப்பு பட்டியலில் ஒப்பந்ததாரர்கள்

தார் சாலைகள் போடப்பட்டு 3 ஆண்டுகளுக்கும், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு 5 ஆண்டு களுக்கும் அதைப் போட்ட ஒப்பந்ததாரர்தான் சாலையின் தரத்துக்கு பொறுப்பு.

இந்த காலக்கெடுவுக்குள் சாலை சேதமடைந்தால், அதை ஒப்பந்ததாரர்தான் சரி செய்ய வேண்டும்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆய்வு செய்த தில் 44 சாலைகள் காலக்கெடு முடிவதற்குள் சேதமடைந்துள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி, அபராதம் கட்ட உத்தரவிட்டுள்ளோம்.

இதை செய்ய தவறினால், இந்த ஒப்பந்ததாரர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT