தமிழகம்

பேருந்து-கார் மோதிய விபத்தில் கோவை பாஜக பொதுச்செயலாளர் பலி

செய்திப்பிரிவு

குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கோவை தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் ஓட்டுநர், கல்லூரி மாணவி ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை அருகே வால்பாறை யைச் சேர்ந்தவர் ஜெயராமன் (64). அவர் கோவை பாஜக தெற்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தார். நேற்று காலை அவர் வியாபார நிமித்தமாக தனது காரில் வால்பாறையில் இருந்து சேலத்துக்கு வந்துள்ளார். வால்பாறையைச் சேர்ந்த முத்துக்குமார் (26) என்பவர் காரை ஓட்டி வந்தார். காரில் மாற்று ஓட்டுநர் பிரகாஷ் என்பவரும் வந்துள்ளார்.

குமாரபாளையம்-சேலம் பைபாஸ் சாலையில் கவுரி தியேட்டர் அருகே கார் வந்தபோது, திடீரனெ ஈரோடு தனியார் கல்லூரி பேருந்து கடந்துள்ளது.

அப்போது பேருந்தின் பின்புறம் மீது கார் வேகமாக மோதி விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் பாஜக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் சம்பவ இடத்தில் இறந்தார். மேலும், கார் ஓட்டுநர் முத்துக்குமார், கல்லூரி பேருந்தில் இருந்த மாணவி சசிகலா (20) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவி சசிகலா, 3-ம் ஆண்டு பிஏ படித்து வருகிறார். சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT